அமெரிக்காவில் வசிக்கும் பெரும்பாலான வெளிநாட்டினர் தங்களின் கிரீன் கார்ட் எனப்படும் நிரந்தர குடியுரிமைக்கு, அவர்கள் தங்கியிருக்கும் அமெரிக்க மண்ணில் இருந்தே விண்ணப்பிக்காமல், தங்களின் சொந்த நாட்டிற்குச் சென்றுதான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற புதிய கொள்கையை அமெரிக்க அரசு கொண்டுவந்துள்ளது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, தற்காலிக விசாக்களில் (மாணவர், பணியாளர் அல்லது சுற்றுலா விசாக்கள்) அமெரிக்காவில் வசிப்பவர்கள், சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, இனி தங்கள் சொந்த நாடுகளில் உள்ள தூதரக சேவைகள் மூலமாகவே கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
குடிவரவு அமைப்பில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்துவதைத் தடுத்து, சட்டம் அதன் அசல் நோக்கத்தின்படி செயல்படுவதை உறுதிசெய்யவே இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் நிறுவனத்தின் தொடர்பாளர் சாக் கேலர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டினர் தங்களின் வருகைக்கான காலம் முடிந்ததும் வெளியேற வேண்டும் என்பதே நமது அமைப்பின் வடிவமைப்பு. அவர்களின் தற்காலிக வருகை, கிரீன் கார்டு பெறுவதற்கான முதல் படியாக மாறக்கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திடீர் கொள்கை மாற்றம், அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெறக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான கனடா நாட்டினருக்கு பெரும் நீண்ட காத்திருப்பு காலத்தையும், சிக்கல்களையும் உருவாக்கும் என கனடா குடிவரவு வழக்கறிஞர்கள் எச்சரிக்கின்றனர்.
கனடாவில் கிரீன் கார்டு விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் ஒரே ஒரு அமெரிக்க தூதரகம் மாண்ட்ரியல் நகரில் மட்டுமே உள்ளது.
ஏற்கனவே உலகிலேயே மிக மெதுவாகச் செயல்படும் தூதரகங்களில் ஒன்றான இதற்கு, இனி ஆயிரக்கணக்கான கனடா மக்கள் வரவிருப்பதால், அங்கு விண்ணப்பங்கள் குவிந்து, காத்திருப்பு காலம் மாதக் கணக்கில் அல்லது பல ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கர்களைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிலேயே நிரந்தரமாக வாழ நினைக்கும் கனடா மக்கள் மற்றும் அங்கு தொழில் நடத்தும் தொழிலதிபர்கள் இந்த புதிய விதியால் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.
அவர்கள் விண்ணப்பத்திற்காக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டியிருப்பதால், தற்காலிகமாக குடும்பங்களை பிரிந்து வாழும் சூழல் ஏற்படும். இந்த அறிவிப்பு எங்களுக்குப் பேரதிர்ச்சியை அளித்துள்ளது.
இதில் என்னென்ன விதிவிலக்குகள் அளிக்கப்பட உள்ளன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த கொள்கை மாற்றத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என குடிவரவு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது கனடா மக்களுக்குப் பாதிப்பு சற்று குறைவுதான் என சட்டத்தரணி ஜோயல் குபர்மேன் தெரிவித்துள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.