டொரண்டோ பெரும்பாக பகுதியில் முதியவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கவனத்திருப்பல் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பெண்களின் புகைப்படங்களை டொரண்டோ பொலிஸார் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்டுள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிப்பதால், அவர்களை அடையாளம் காணவும், சம்பந்தப்பட்ட தகவல்களைப் பெறவும் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி 21ஆம் திகதி மதியம் 12 மணியளவில், Finch Avenue West மற்றும் Woodbine Downs Boulevard பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக டொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, தனது வாகனத்தில் அமர்ந்திருந்த பாதிக்கப்பட்ட பெண்ணை இரு சந்தேக நபர்கள் அணுகியுள்ளனர். அவர்களில் ஒருவர் போலி iPhone மற்றும் போலி நகைகளை கையில் கொடுத்து, கவனத்தைத் திசைதிருப்ப முயன்றதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர், பாதிக்கப்பட்டவரின் நகைகளை அகற்ற முயன்ற சந்தேக நபர்கள், அவரது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலிகளை வலுக்கட்டாயமாகப் பறித்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் சிறிய காயங்களுக்கு உள்ளானதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் அடிப்படையில், டொரண்டோவைச் சேர்ந்த 20 வயதான Patricia Ghivea மே 31ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வன்முறையுடன் கூடிய கொள்ளை, குற்றச்செயலுக்கான சதி, மற்றும் பொது அதிகாரியைத் தாக்கிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், டொரண்டோவைச் சேர்ந்த 23 வயதான Loredana Gardian ஜூன் 2ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வன்முறையுடன் கூடிய கொள்ளை மற்றும் குற்றச்செயலுக்கான சதி ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து டொரண்டோ பொலிஸ் அதிகாரி ரான் டவெர்னர் கூறுகையில், இத்தகைய குற்றங்கள் டொரண்டோவிலேயே மட்டும் அல்லாது Halton Region, Hamilton, Montreal மற்றும் பிற பகுதிகளுடனும் தொடர்புடையதாக இருக்கலாம் என தெரிவித்தார்.
முதியவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய பொதுமக்களை திட்டமிட்டு குறிவைக்கும் இத்தகைய குற்றச்செயல்கள் குறித்து பொலிஸார் கடும் கவலை வெளியிட்டுள்ளனர்.
2026 FIFA World Cup போட்டிகளை முன்னிட்டு டொரண்டோவுக்கு உலகம் முழுவதிலிருந்தும் பலர் வரவுள்ள நிலையில், பொது இடங்கள், சுற்றுலாத் தளங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பொதுமக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பொது இடங்களில் அந்நிய நபர்கள் அளவுக்கு மீறிய நட்பு அல்லது பாசம் காட்டி அணுகினால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், குறிப்பாக நகைகள், பணப்பைகள், மொபைல் போன்கள் போன்றவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
பொலிஸார் வழங்கிய பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்:
- மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எப்போதும் சுற்றுப்புறத்தை கவனிக்க வேண்டும்.
- கைப்பைகள், பேக்பேக்குகள் ஆகியவற்றின் ஜிப்களை மூடி உடலுக்கு அருகில் வைத்திருக்க வேண்டும்.
- அந்நிய நபர்கள் மிக நெருக்கமாக பழக முயன்றால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- மதிப்புள்ள பொருட்களை உணவக மேசைகள் அல்லது நாற்காலிகளில் பாதுகாப்பின்றி வைக்கக் கூடாது.
- யாராவது உங்கள் கழுத்தில் நகை அணிவிக்க முயலும் அளவுக்கு அருகில் வந்தால், அது ஆபத்தான சூழலாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 416-808-2300 என்ற எண்ணில் டொரண்டோ பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பெயர் தெரிவிக்காமல் தகவல் வழங்க விரும்புவோர் Crime Stoppers அமைப்பை 416-222-TIPS (8477) என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.