சீனாவை சமாளிக்க கனடா, மெக்ஸிகோவை நாடும் அமெரிக்க பாலுற்பத்தித் துறை!

அமெரிக்காவின் விவசாய மற்றும் பாலுற்பத்தித் கைத்தொழில்கள், சீன – அமெரிக்க வர்த்தக நெருக்கடி காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் தீர்வைகளும், அதற்கு பதிலடியாக சீனா விதித்துள்ள தீர்வை வரிகளும் இந்த பாதிப்பை மேலும் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக கனடா, மெக்ஸிகோ மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சந்தையை நாடும் நிலைக்கு அமெரிக்காவின் வர்த்தகத்துறை தள்ளப்பட்டுள்ளது.

கடந்த நான்கு வருடங்களாக அமெரிக்காவின் பாலுற்பத்திகள், கேள்விக்கு மேலதிகமான விநியோகம் மற்றும் குறைந்த பொருள் விலை என்பன காரணமாக பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்தது.

இந்தநிலையில், கடந்த ஆண்டு சீனாவுக்கு 577 மில்லியன் டொலர் பெறுமதியான பால் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இது அமெரிக்க பால் ஏற்றுமதியின் மூன்றாவது மிகப்பெரிய சந்தையாகும். இதனையடுத்து அமெரிக்காவின் சந்தையில் சற்று சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டன.

இந்த சூழ்நிலையில், கடந்த ஜூலை மாதம் சீனா தனது பதிலடி தீர்வை வரியை அறிவித்ததன் விளைவாக மீண்டும் நிச்சயமற்ற நிலைமைக்கு தள்ளப்பட்டது.

பின்னர் அமெரிக்கா மாற்று வழிகளை தேட ஆரம்பித்த தருணத்தில் கனடா, மெக்ஸிகோ மற்றும் பிரித்தானியா நாடுகளில் தனது விற்பனையை விஸ்தரிக்க முயற்சி செய்தது.

வட அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான நப்டா உடன்படிக்கையை ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றமையும், சீனாவுடனான தீர்வை வரி பிரச்சினையின் பின்விளைவுகளின் காரணமாக இருக்கலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா, இரும்பு மற்றும் அலுமினியம் பொருட்களை இறக்குமதி செய்யும் கனடா, ஐரோப்பிய நாடுகள், சீனா உள்ளிட்ட சில நாடுகள் மீது தீர்வை வரிகளை விதித்தது.

அந்த நாடுகளும், மற்ற நாடுகளுடன் சேர்ந்து, பல இலக்குகளை கொண்ட விவசாய துறை சார்ந்த பொருட்கள் மீது சொந்தக் கட்டணத்துடன் தீர்வை வரிகளையும் விதித்து பதிலடி கொடுத்தன.  இதனால் அமெரிக்காவின் வர்த்தக துறை பல விதத்திலும் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.