இஸ்லாமிய அமைப்பு மீது கனடா தடை!

காஷ்மீர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய குழுவுக்கு நிதி வழங்கியதாக கூறப்படும் இஸ்லாமிய அமைப்பு மீது கனடா அரசாங்கம் தடை விதித்துள்ளது.

வட அமெரிக்க – கனடா இஸ்லாமிய கூட்டமைப்பு (ஐஎஸ்என்ஏ கனடா) காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் அமைப்புடன் தொடர்புடைய குழுவுக்கு நிதி வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக ஐஎஸ்என்ஏ கனடா அமைப்புக்கு அடுத்து ஓராண்டுக்கு கனடா அரசு தடை விதித்துள்ளதோடு, 5,50,000 டொலர்கள் அபராதமும் விதித்துள்ளது.

இதுதொடர்பாக கனடா நிதியமைச்சகம் நடத்திய சோதனையில், கடந்த 2007 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் ஐஎஸ்என்ஏ கனடா அமைப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஆர்ஓகேஎம் என்னும் அமைப்புக்கு 90000 டொலர்கள் நிதியளித்துள்ளது.

இந்த ஆர்ஓகேஎம் அமைப்பானது ஹிஸ்புல் முஜாஹிதின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அமைப்பு இந்தியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.