கனேடியருக்கு புது முகம் கொடுத்த மருத்துவர்கள் – மருத்துவ துறையில் புரட்சி

ஏழரை ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்த கனேடியர் ஒருவருக்கு மருத்துவர்கள் புது முகம் ஒன்றினை கொடுத்துள்ளமையானது மருத்துவ உலகில் புதிய சாதனையாக பார்க்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வேட்டையாடச் சென்ற Maurice Desjardins வீடு திரும்பும் போது அவரது முகத்தில் மூக்கு, உதடுகள், தாடை, பற்கள் எதுவுமே இல்லை.

கோர விபத்தொன்றில் அவர் முகம் அகோரமாகிப்போனது. அன்று முதல் ஏழரை ஆண்டுகளாக யாரையும் சந்திக்காமல் தனது தனியறையிலேயே வலியிலும், அவமானத்திலும் குறுகிப்போய் வாழ்ந்து வந்தார் Maurice Desjardins.

ஒரு நாள் Montrealஇல் உள்ள பிளாஸ்டிக் சர்ஜனான Daniel Borsukஐக் காண வந்தார் Maurice. இரண்டு விடயங்களை மருத்துவரிடம் கேட்டார் அவர், மூக்கு, உதடுகள், தாடை, பற்கள் ஆகியவை வேண்டும், இரண்டு, தனது பேத்தியுடன் மீண்டும் வாக்கிங் செல்லும்போது தன்னை யாரும் அருவருப்பாகப் பார்க்கக்கூடாது.

இந்தநிலையில் தனது நோயாளியை வருடக்கணக்காக ஆராய்ந்தார் Dr. Daniel. அவர் இந்த சிகிச்சையைத் தாங்குமளவிற்கு உடலளவிலும் மன ரீதியாகவும் வலிமையாகஇருக்கிறாரா என நீண்ட காலத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இறுதியில் 9 மருத்துவர்கள், பல வல்லுனர்கள், 100 மருத்துவ தாதியர்களும் இதர மருத்துவப் பணியாளர்களும் என பலர் இணைந்து Mauriceக்கு புதிய முகத்தை கொடுக்கும் 30 மணி நேர அறுவைசிகிச்சையில் இறங்கினார்கள்.

பெரிய மனம் கொண்ட ஒரு குடும்பம், இறந்த தங்கள் குடும்ப உறுப்பினரின் முகத்தை தானமாக கொடுக்க முன் வந்தது.

அறுவை சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிசைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார் Maurice. அவர் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடைசியாக Mauriceஇன் ஆசைகள் நிறைவேறி விட்டன, இனி அவர் விருப்பபடியே தனது பேத்தியுடன் வாக்கிங் செல்லலாம்.

இது கனடாவின் முதல் முக மாற்று அறுவை சிகிச்சை என்பதும், Maurice தான் அதிக வயதான காலத்தில் இந்த அறுவை சிகிச்சைக்கு உள்ளானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அறுவை சிகிச்சையின்போது Maurice இன் வயது 64 என கூறப்படுகின்றது.