டிரான்ஸ் மவுண்டன் எண்ணெய் குழாய் திட்டம்: பிரதமர்- அல்பர்ட்டா முதலமைச்சர் சந்திப்பு

டிரான்ஸ் மவுண்டன் எண்ணெய் குழாய் விரிவாக்க திட்டம் தொடர்பாக, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அல்பர்ட்டா முதலமைச்சர் ரேச்சல் நோட்லே-உடன் கலந்துரையாடியுள்ளார்.

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தின் தலைநகரான எட்மன்டனில் நேற்று (புதன்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெற்றறுள்ளது.

டிரான்ஸ் மவுண்டன் எண்ணெய் குழாய் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்திற்கான அனுமதியை, கனேடிய நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அதற்கு எதிராக மேன்முறையீடு செய்யுமாறு அல்பர்ட்டா முதலமைச்சர் கோரியுள்ளார்.

அல்லது எண்ணெய் குழாய் திட்டத்தை விரிவுபடுத்துவதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்துமாறு கோரியுள்ளார்.

இதேவேளை, இப்பிரச்சினைக்கு இரு தரப்பும் இணைந்து தீர்வு காண்பது தொடர்பாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

டிரான்ஸ் மவுண்டன் எண்ணெய் குழாய் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்திற்கான அனுமதியை, கனேடிய நீதிமன்றம் கடந்த வாரம் ரத்து செய்திருந்தது.

டிரான்ஸ் மலை விரிவாக்க திட்டத்தினால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினை குறித்து பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அரசாங்கம் கருத்திற் கொள்ளவில்லை எனத் தெரிவித்தே நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியிருந்தது.

இந்த திட்டத்தினால் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து நாட்டின் எரிசக்தி ஒழுங்குறுத்துனர், தேசிய எரிசக்தி சபை ஆகியனவும் கருத்திற் கொள்ளவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த நீதிமன்ற உத்தரவானது கனடாவின் எண்ணெய் உற்பத்தியாளர்களை கடுமையாக பாதித்துள்ளதுடன், கச்சா எண்ணெய் விலை குறைப்பிற்கு எண்ணெய் குழாய் விரிவாக்கத் திட்டம் அவசியமானது என்றும் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

டிரான்ஸ் மலை எண்ணெய் குழாயானது, கனடாவின் அல்பர்டாவிலிருந்து, பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை கொண்டு செல்வதற்கான ஒரு அமைப்பாகும்.