சவுதியின் செயற்பாட்டிற்கு கனடா கண்டனம்

கனடாவில் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள் கிட்டியும் தமது நாட்டு மாணவர்களை அங்கு அனுப்புவதற்கு சவுதி அரேபியா மறுத்துள்ளது.  இதுகுறித்து சவுதி அரசாங்கம் வெட்கித் தலைகுனிய வேண்டுமென கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிரிஸ்டியா ஃப்ரீலான்ட் தெரிவித்துள்ளார்.

கனடாவுடனான கல்வி நிகழ்ச்சி பறிமாற்றும் திட்டத்தினை சவுதி அரேபியா இடைநிறுத்திக் கொண்டதைத் தொடர்ந்தே, இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், அதற்காக அந்நாடு வெட்கப்பட வேண்டுமென நேற்று (திங்கட்கிழமை)  கனேடிய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

உயர்கல்வியில் கனடா மிகவும் சிறப்பான நிலையில் இருப்பதால், உலக நாடுகள் பலவற்றிலிருந்து கனடாவுக்கு செல்கின்றனர். இதனை சுட்டிக்காட்டிய கனேடிய வெளிவிவகார அமைச்சர், சவுதியினுடைய தீர்மானங்கள் பயனற்றதெனக் குறிப்பிட்டார்.

கனடா எப்போதும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து செயற்படும் நாடென  சவூதிக்கான கனேடிய தூதுவர் தெரிவித்திருந்ததையும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மனித உரிமைகள் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பில் பணியாற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை சவுதி அரசாங்கம் கைதுசெய்து வருகின்றமைக்கும் கனடா எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.