Rexdale பகுதி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணை

Rexdale பகுதியில் நேற்று இரவு மூன்று பேர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Dixon வீதி மற்றும் Skyway Avenue பகுதியில் நேற்று இரவு 10.20 அளவில் வாகனம் ஒன்றில் வந்தவர்கள், குறித்த மூன்று பேரும் பயணித்துக் கொண்டிருந்த காரை நிறுத்தி துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், அந்த காரினுள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட மூன்று ஆண்களையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதிகத்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று நம்புவதாகவும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதா என்பதும் இன்னமும் கண்டறியப்படாததுடன், சந்தேக நபர்கள் குறித்த விபரங்களும் வெளியிடப்படாத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.