York-Spadina சுரங்க தொடரூந்து பாதை திறப்பு விழா – பிரதமர் பங்கேற்கிறார்

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த York-Spadina நிலக்கீழ் தொடரூந்து பாதை விரிவாக்கத்திற்கான திறப்பு நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.

ரொரன்ரோவின் எல்லைக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள முதலாவது நிலக்கீழ் தொடரூந்து நிலையமான இந்த York-Spadina நிலக்கீழ் தொடரூந்து பாதையின் விரிவாக்க திறப்பு விழாவில், பிரதமர் ஜஸ்டின் ரூடோ, ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின், ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை 9.45 மணிக்கு, Vaughan Metropolitan Centre தொடரூந்து நிலையித்தில், நாடா வெட்டி திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆரம்ப நிகழ்வி்ல, வெள்ளோட்டம் செல்லவுள்ள முதலாவது தொடரூந்தில், பிரதமர் ஜஸ்டின் ரூடோ, Vaughan Metropolitan Centre நிலையத்தில் இருந்து, யோர்க் பல்கலைக்கழக நிலையம் வரையில் பயணிப்பார் என்று கூறப்படுகிறது.

எனினும் ஆறு நிறுத்தங்களை கொண்ட, 8.6 கிலோமீட்டர் நீளமான இந்த தொடரூந்து பாதை, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையே உத்தியோகபூர்வமாக முழுமையான பாவைக்கு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது.