Hydro One உலங்குவானூர்தி விபத்தில் நான்கு பேர் பலி

ஒன்ராறியோவின் கிழக்கே, Tweed பகுதியில் நேற்று உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

Belleville இலிருந்து வடகிழக்கே சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில், நேற்று நண்பகல் 12 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதனை ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Hydro One Helicopter Crash 2017

ஒன்ராறியோ மின்சார வாரியமான ஹைட்ரோ வண் (Hydro One) பணியாளர்கள் சென்ற உலங்குவானூர்தியே விபத்துக்குள்ளானதாகவும், அதன்போது உயிரிழந்த நால்வரும் தமது பணியாளர்களே எனவும் ஹைட்ரோ வண் தெரிவித்துள்ளது.

குறித்த அந்த பகுதியில் கடந்த சில வாரங்களாகவே மின் இணைப்பு பராமரிப்பு பணிகள் இடம்பெற்று வருவதாகவும், அதனால் அந்த பகுதிக்கு இவ்வாறு உலங்குவானூர்தி வந்து போவது வழக்கமான நிகழ்வாக இருந்ததாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் நேற்று பாரிய சத்தத்துடன் இந்த விபத்து சம்பவித்துள்ளதாகவும், தாம் வெளியே சென்று பார்த்தபோது, உலங்குவானூர்தியின் பாகங்கள் மரங்களிலே சிக்கியவாறு காணப்பட்டதாகவும் அவர்கள் சம்பவம் தொடர்பில் விபரித்துள்ளனர்.

இதேவேளை கடமை நிமித்தம் அங்கு சென்ற தமது உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில், தமது பணியாளர்கள் நால்வரை பறிகொடுத்து விட்டதாகவும், அவர்களின் குடும்பத்தாருக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் ஹைட்ரோ வண் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் கேள்வியுற்று கவலை வெளியிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, ஒன்ராறியோவின் கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்ற இந்த அனர்த்தம் குறித்து அறிந்து அதிர்த்ச்சியுற்றதாகவும், இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.