ISIS என கூச்சலுடன் குடும்பத்தினரை தாக்க முயன்ற நபர் கைது.

கனடாவின் ஒன்ராரியோவில் உள்ள வாகனம் நிறுத்துமிடம் ஒன்றில் கொலம்பியாவைச் சேர்ந்த மரி ஜம்பரனோ என்ற நபர் தனது மனைவியான செர்ஜியோ மற்றும் 13 வயதான தனது மகனுடன் நின்றுகொண்டிருந்தார்.

குறித்த மூவரும் தங்களுக்குள் ஸ்பானிய மொழியில் உரையாடியபடி நின்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு அருகில் வந்த முப்பத்தாறு வயதான மார்க் பில்லிப்ஸ் என்ற நபர், திடீரென்று அந்த மூவரையும் பார்த்து, நீங்கள் ஐ.எஸ் தீவிரவாதிகள்தானே எனக் கத்தியபடி தனது கையில் வைத்திருந்த பேஸ்பால் மட்டையால் தாக்க முயன்றுள்ளார்.

இதுபற்றி செர்ஐியோ கூறுகையில், “நாங்கள் ஸ்பானிய மொழி பேசிக்கொண்டிருந்தோம். அதனை பிரஞ்ச் மொழி என தவறாக புரிந்துகொண்டதனாலேயே மார்க் அவ்வாறு வன்மையாக செயற்பட்டார்” என கூறினார்.

இதேவேளை, அங்கிருந்த பெண் ஒருவர் பொலிஸாரிற்கு வழங்கிய தகவலின்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் மார்க்கை கைது செய்தனர். மேலும், இது ஒரு இனவெறித் தாக்குதல் என தெரிவித்த பொலிஸார் மார்க்கை பிணையில் விடுவிப்பதற்கு மறுத்துள்ளதோடு எதிர்வரும் திங்கட் கிழமை அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.