கனடாவில் முதியவர்கள் ஓய்வு பெற தயாராக இல்லை!

ஓய்வு பெறும் வயதை நெருங்கிய பிறகும் ஓய்வு பெற மக்கள் தயாராக இல்லை என்று கனடாவின் CIBC வர்த்தக வங்கி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

CIBC  வங்கிக்காக ஹேரிஸ் டெஸிமா என்ற நிறுவனம் ஆயிரம் கனடா மக்களிடம் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில் 44 சதவீதம் பேர் பொருளாதார அடிப்படையில் தாங்கள் ஓய்வு பெற தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளனர். இவர்களில் 31 சதவீதம் பேர் 55 முதல் 64 வயதிற்கு உட்பட்டவர்கள்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பெரும்பாலும் மக்கள் ஓய்வுக்கால திட்டம் வைத்துள்ளனர். இவ்வாறான திட்டம் வைத்திருப்பவர்களில் 76 சதவீதம் பேர் ஓய்வுக்கால வாழ்க்கைக்கு தயாராக உள்ளனர்.

கால்வாசிப்பேர் மட்டும் எவ்வித திட்டமும் இல்லாததால் ஓய்வுக்காலத்தை அனுபவிக்க இயலாமல் வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கின்றனர்.

கனடாவில் 55 வயதினரில் மூன்றில் ஒரு பங்கினர் இன்னும் 16 ஆண்டுகளுக்கு கடனைச் செலுத்த வேண்டிய திட்டங்களில் இணைந்துள்ளனர்.

கடந்த பத்தாண்டுகளில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மூன்று மடங்கு கடன் சுமைக்கு ஆளாகி உள்ளனர்.  கடன் நெருக்கடியினால் இந்த நாட்டில் முதியவர்களால் ஓய்வு பெற இயலவில்லை.