தூய தமிழ்ப்பெயர்களுக்கு 1,500 வெள்ளி பரிசுத்தொகை

தூய தமிழ்ப்பெயர்களுக்கு 1,500 வெள்ளி பரிசுத்தொகை
கனடா தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் அறிவிப்பு
27.12.11

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழ்ப் புத்தாண்டு தைப் பொங்கல் திருவள்ளுவர் பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழாவினை நடத்தி வருகிறது. தை முதல் நாளே பொங்கல் விழாவாகவும் தமிழ்ப் புத்தாண்டாகவும் திருவள்ளுவரின் பிறந்த நாளாகவும் திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க நாளாகவும் தமிழ்நாடு உட்பட உலகளாவிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த முப்பெரும் விழா 733 Birchmount Road, Scarborough (Birchmount/Eglinton) அமைந்திருக்கும் கனடா முருகன் கோயில் மண்டபத்தில் சனவரி 15 (ஞாயிற்றுக்கிழமை) 2012 மாலை 5.00 – 9.00 மணி வரை நடைபெறும்.

 

பொங்கல் விழாவானது உழவுத் தொழிலுக்கு வெப்பமும் மழையும் தந்துதவிய ஞாயிறுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக உழவர் பெருமக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தமிழர்க்கே உரித்தான தனித்துவமான விழாவாகும். சமயம் சாராத பகுத்தறிவுக்கு ஒத்த மதசார்பற்ற பெரு விழாவாகவும் தமிழர்களின் பண்பாட்டுக் கோலத்தை வெளிப்படுத்தும் விழாவாகவும் அமைந்துள்ளது.

 

முதல்முறையாக 2002 ஆம் ஆண்டில் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் இந்த விழாவை நடத்தியது.
இந்த முப்பெரும் விழாவில் ஊரில் பொங்குவது போல் கோலம் இட்டு, தோரணங்கள் கட்டி, பொங்கல் பானைக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் தடவி புத்தரிசியோடு பால், வெல்லம் முந்திரிப் பருப்பு, திராட்சை, ஏலக்காய் சேர்த்துப் பொங்கல் பொங்கி, கரும்பு உண்டு கொண்டாடப்படுவது ஒரு சிறப்பாகும்.

 

இந்த விழாக்களில் தூய தமிழ்ப் பெயர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறுவர்களுக்கு வருணம் தீட்டும் போட்டி, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் தூய தமிழ்ப் பெயர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை 1,500 வெள்ளியாகும். முதற் பரிசு உட்பட பத்து ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். அதற்கான விண்ணப்பத்தின் முடிவு நாள் சனவரி 10, 2012 ஆகும்.

இந்த ஆண்டு நடைபெறும் தமிழ்ப் புத்தாண்டு தைப் பொங்கல் திருவள்ளுவர் பிறந்த நாள் முப்பெரும் விழாவில் தம்மையும் இணைத்துக் கொள்ளுமாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் விடுத்த வேண்டுகோளை தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

 

எல்லா அமைப்புக்களும் தமிழ்ப் புத்தாண்டு தைப் பொங்கல் திருவள்ளுவர் பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழாவை சீரோடும் சிறப்போடும் கொண்டாட வேண்டும் என்பதே எமது பெரு விருப்பாகும்.

கனடாவில் உள்ள மிகப்பெரிய மார்க்கம் மாநகர மன்றம் ஒவ்வொரு ஆண்டும் தை 13, , 14, 15 ஆம் நாட்களை தமிழர்களின் மரபு நாட்களாகவும் தைப்பொங்கல் விழாவை மரபு விழாவாகவும் கொண்டாட ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் கனடாவில் ஒரு தமிழர் கொண்டாட்டத்தையும் அதனோடு சார்ந்த நாட்களையும் அரசமுறைப்படி ஒப்புதல் அளித்த மாநகர மன்றம் என்ற பெருமையை மார்க்கம் நகர மன்றம் பெற்றுள்ளது.

 

எங்கள் மொழியையும் பண்பாட்டையும் கட்டிக் காத்து அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கும் பொறுப்பு புலம்பெயர் தமிழர்கள் ஆகிய எங்கள் எல்லோருக்கும் உண்டு.
இந்தப் புத்தாண்டில் தாயக மண்ணில் தமது வாழ்வாதாரங்களை இழந்து வாடும் எம் உறவுகளின் வாழ்க்கையில் ஒளி பிறக்கும் என்ற நம்புகிறோம்.

 

இந்த முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தமிழ்மக்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். இந்த விழாவில் வன்னியில் வாழ்வாதரங்களை இழந்து அல்லல்படும் குறைந்தபட்சம் நூறு இடம்பெயர்ந்த உழவர்களுக்கு மண்வெட்டியும் பிடியும் மேலும் சிலருக்கு தையல் இயந்திரமும் வாங்கிக் கொடுப்பதற்கான நிதி சேகரிப்பு இடம்பெறும்.

 

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்
தொடர்பு: தொ.பே.
(416) 281 1165

(416) 321 3343

(416) 416 335 9462
(647) 829 4044